Tuesday, 12 August 2014

கொல்லிமலை


     கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட இடமே “கொல்லி மலை” ஆகும். இதன் நான்கு புறங்களும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் இதனை “சதுரகிரி” என்றும் அழைக்கின்றனர்.
     நாமக்கல் மாவட்டத்தில், 1000மீட்டர் முதல் 1300மீட்டர் உயரமுள்ள கொல்லிமலையின் மொத்த பரப்பளவு 280 சதுர கிலோமீட்டர் ஆகும். இயற்கை அழகு நிறைந்த இந்த கொல்லிமலையை அண்மையில் தமிழ்நாடு சுற்றுலாத்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில்

     மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் ‘அறப்பளி மகாதேவன்’, ‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ‘ மீன் கோயில் ‘ என்றும் அழைக்கப்படுகிறது     ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி     கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக – 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.  இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
கொல்லிப்பாவை

     அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் “கொல்லிப்பாவை” என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.
      இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.
     இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் “எட்டுக்கை அம்மன்” என்று கூறுகின்றனர்.
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
முருகன் கோயில்

     அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
படகு சவாரி

     தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்.
        தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன. வல்வில் ஓரி பண்டிகை
        செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) ‘வல்வில் ஓரி’ மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஆடி மாதம் 18 ஆம் நாளில் ‘வல்வில் ஓரி விழா’ நடத்தப்படுகிறது.       சித்தர்களும்,முனிவர்களும் வாழ்ந்த இந்த கொல்லிமலையில், இயற்கைவளங்களும்,சுவாரஸ்யமான விசயங்களும் நிறையவே உள்ளன.
கொல்லி மலையின் அடிவாரத்திலே வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள் . அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக் கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி 300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில் குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள் .
1.தலைவணங்கி வேர்

இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள் , எதிரிகள் பணிந்து போவார்கள் என்று சொல்லுகிறார்கள்,

2,மலைமுழுங்கி வேர்

இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று சொல்லுகிறார்கள் .
அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த வேர்.எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வர இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,
இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக் கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள். நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி மூலிகை என்று சொல்லுகிறார்கள். மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்.
அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான் எடுப்பார்களாம். அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமான இடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூஜைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால் அந்த செடி மிக நன்மை பயக்குமாம்.
     நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments: