Sunday, 10 August 2014

குற்றாலம்


     மேற்குதொடர்ச்சி மலையில் இயற்கை வளம் நிறைந்த குற்றாலத்திற்கு மனம் மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. திருநெல்வேலி மாவட்டத்தில் தென் காசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குற்றாலம். இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
     இயற்கை சூழலில், ஆர்பரிக்கும் அருவியில் குளிப்பது ஒரு சுகமான அனுபவம் என்பதால் சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலத்திற்கு வருகின்றனர். குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. இங்கிருக்கும் குற்றாலநாதர் கோவிலும் ஒரு சிறப்பம்சமாகும். குற்றாலத்தில் எண்ணெய் குளியல் விசேசமானதாகும்.

பேரருவி
இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் உள்ள அருவிகளிலேயே இது முதன்மையானதாக கருதப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.  உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது. சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.  மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும்.
சிற்றருவி
இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது. பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது.
 செண்பகாதேவி அருவி
 பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 தேனருவி
செண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.  மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது. 
 ஐந்தருவி
 பேரருவியிளிருந்து  சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
 பழத்தோட்ட அருவி
இது வி.ஐ.பி ஃபால்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இது பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
புலியருவி
 குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.
பாலருவி
இது தேனருவி அருகே அமைந்துள்ளது.
பழைய குற்றால அருவி
குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
திருக்குற்றாலநாதர் கோவில்
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே சித்திர சபை திகழ்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன.
போக்குவரத்து
ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை குற்றாலத்தின் சீசனாகும். குற்றாலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தென்காசி ரயில் நிலையம் உள்ளது. 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையிலிருந்து பேருந்து வசதிகள் அதிக அளவில் உள்ளது.
குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.


நாளை : ஏலகிரி சுற்றுலா

No comments: