வீட்டில் இல்லத்தரசிகளின் பிரதான பகுதியாக விளங்குவது சமையல் அறைகளே. கட்டுமானத்துறையில் பல வகையான தொழில்நுட்ப முறைகள் புகுந்து விட்டாலும் துரித கதியில் வேலையை முடிக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைத்துவிடுகின்றன. சில சமயங்களில் வரைமுறை இல்லாமல் இருக்கும் இடத்தில் அறைகள் கட்டப்பட்டு விடுகின்றன. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் அறைகளில் ஒன்றாக அமைந்து விடுகிறது சமையல் அறை.
பெரும்பாலானோர் வீட்டின் கடைசி அறையாகத்தான் சமையல் அறையை அமைப்பதால் அதன் பரப்பளவு சுருங்கி போய் விடுகிறது. இதனால் இல்லத்தரசிகள் எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையும் உருவாகி விடுகிறது. வசதிகேற்ப வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் நவீனமாக்கப்பட்டாலும் சமையல் அறைகளை பழைய நிலையிலே பெரும்பாலானோர்கள் வீடுகளில் காட்சி அளிக்கும். சமையல் அறைகளை எளிமையான வழிமுறைகளை கையாண்டு நவீனப் படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை நீக்கும் வகையில் பெயிண்டுகளை சுரண்டி சுத்தம் செய்ய வேண்டும்.
* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்றும் ‘வென்டிலேசன் பேன்களை’ கட்டாயமாக பொருத்தவேண்டும். இவை சமையல் அறையில் பரவி இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி அறையில் மிதமான வெப்பநிலையை தக்கவைக்க வழிவகை புரியும். மேலும் சமைக்கும்போது வெளிப்படும் நெடிகளை வெளியேற்றி விடும். இல்லையெனில் நெடிகள் சமையல் அறையையும் அதன் அருகில் உள்ள அறைகளிலும் சூழ்ந்து கொண்டிருக்கும். இது வீட்டில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிப்பதாக அமையும்.
* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி பார்த்துவிட்டு வடிவமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு மற்றும் பகல் நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக விளக்குகளை பொருத்த வேண்டும். சமையல் அறைகளில் பளிச்சென்று எரியும் விளக்குகளை விட கலைநயத்துடன் எரியும் மஞ்சள் நிற விளக்குகளை பொருத்துவது மிகவும் பிரம்மாண்டமான சூழலை உருவாக்கும். விளக்குகளை அனைத்து இடங்களிலும் ஒளிரவிடும்படி செய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.
* சமையல் அறையின் கபோர்ட்டு மற்றும் ரேக்குகளின் வெளிபுற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும்.
* அறையின் அழகியலை வெளிப்படுத்துபவை வண்ணங்கள். சமையலறைக்கு பயன்படுத்தும் வண்ணங்கள் சற்று அடர் நிறமாக இருப்பது அறையின் மதிப்பை உயர்த்துவதாக அமையும்.
* சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையில் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.
* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துடைத்து சுத்தமாக பராமரித்து வரவேண்டும்.
* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால் பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.
* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும் பிரிட்ஜ் முழுவதும் பரவி விடும். அதனால் அழுகும் நிலையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

No comments:
Post a Comment